தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலியால் சிக்கிய உத்தம திருடன்.. கோனிகா கலர் லேப் ஓனர் கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்! - கோனிகா கலர் லேப்பில் கொள்ளையன் சிக்கியது எப்படி

கோனிகா கலர் லேப் உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த திருடன் அதிகமாக கொள்ளையடித்ததாக உரிமையாளர் புகார் கொடுத்த செய்தியைக் கேட்டு ஆதங்கத்தில் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

robbery at Konica Color Lab owner house
கோனிகா கலர் லேப் ஓனர் வீட்டில் கொள்ளை

By

Published : Mar 15, 2023, 7:23 AM IST

சென்னை: சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (65). இவர் சென்னை உட்பட இந்தியா முழுவதும் இயங்கி வரும் பிரபல போட்டோ நிறுவனமான கோனிகா கலர் லேபின் உரிமையாளர் ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தனது மனைவி அருணா தேவியுடன் சந்தோஷ் குமார் சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டு, 28 ஆம் தேதி குடும்பத்துடன் சென்னை வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ மற்றும் லாக்கரில் இருந்த 66 சவரன் தங்க, வைர நகைகள், 80 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 13.5 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக சந்தோஷ்குமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பின் கொள்ளையனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதற்கிடையே ஜே.ஜே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளை வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முத்து என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அதே நபர் தான் விருகம்பாக்கம் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியது என்பது அம்பலமானது.

குறிப்பாக கொள்ளையன் முத்துவை பிடிப்பதற்கு போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர் ஆகியவற்றை ஆய்வு செய்து தேடி வந்தனர். இருப்பினும் கொள்ளையனை பிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே இருந்து வந்தது. அதன் பிறகு எதிலுமே அகப்படாத திருடன், செய்த ஒரு சிறிய தவறால் சிக்கியது எப்படி?

திருட்டு மொபைல் ஒன்றை பயன்படுத்தி நண்பர்களுக்கும், காதலிக்கும் கால் செய்யும் போது கொள்ளையன் போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார். அந்த செல்போன் சிக்னல்கள் வைத்து ஆய்வு செய்த போது கொள்ளையன் முத்து பயன்படுத்தியது திருட்டு செல்போன் என்பது உறுதியானது. இருப்பினும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வேறொரு நம்பரை திருட்டு செல்போனில் ஒரு முறை பயன்படுத்தி பேசியதன் மூலம் சிக்கியுள்ளார். அவ்வாறு அந்த செல்போன் எண்களை வைத்து கொள்ளையன் முத்துவின் காதலியை போலீசார் பிடித்து கண்காணிப்பில் வைத்திருந்த போது, கொள்ளையன் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக கைது செய்யப்பட்ட கொள்ளையன் முத்துவிடம் விசாரணை நடத்திய போது, தான் விருகம்பாக்கத்திலும் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியதை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். குறிப்பாக பெரிதும் பள்ளிப் படிப்பை படிக்காத கொள்ளையன் முத்து கொள்ளையடிப்பதற்காக தொழில்நுட்பங்கள் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கடப்பாரை பயன்படுத்தி, சூரிய மறைவின் போது ஆளில்லா வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இரவு 10 மணிக்கு மேல் மட்டும்தான் போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்துவார்கள், ஆகையால், அவர் எப்போதும் பொழுது சாயும் நேரத்தில் தான் மக்களோடு மக்களாக கொள்ளையடித்த பொருளை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளான். பின்னர் கொள்ளையடித்த பணம், நகை பொருட்களில், வெள்ளிப் பொருட்களை உருக்கி கட்டிகளாக வீட்டின் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை கையோடு வைத்துக்கொண்டு லாரியின் மூலமாக மட்டுமே வெளி மாவட்டங்களுக்கு பயணம் செய்து விற்று பணமாக்க முயன்றுள்ள சம்பவமும் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தான் கொள்ளையடித்து பணம் சம்பாதித்த பிறகு அதை வைத்து தொழில் தொடங்க இருந்ததாகவும், அவ்வாறு தொழில் தொடங்கிய பின் லாபம் அதிகமாக சம்பாதிக்கும் பொழுது யார் யாரிடம் எல்லாம் கொள்ளையடித்தோமோ அவர்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுக்க லட்சியமாக கொண்டிருந்ததாகவும் உத்தம கொள்ளையனான முத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னதாக செய்த கொள்ளைச் சம்பவங்கள் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தன் சகோதரனுக்கு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற உதவியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தான் கொள்ளையடித்த நகை, பணத்தை மதிப்பை விட அதிகமாக கோனிகா கலர் உரிமையாளர் புகார் அளித்ததாகவும், அதனை செய்தியில் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், தான் புகாரில் குறிப்பிட்டதை விட குறைந்த அளவை கொள்ளை அடித்துச் சென்றதாக ஆதங்கத்தில் அனைத்தையும் விரிவாக வாக்குமூலமாக தெரிவித்து ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையன் முத்துவிடம் இருந்து சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள உருக்கிய வெள்ளிக்கட்டிகள், வெள்ளி பாத்திரங்கள், தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் 65 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக தற்போது போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கொள்ளையனை கைது செய்து கொள்ளை போன பொருளை மீட்டு கொடுத்த 3 தனிப்படை போலீசாரையும் அழைத்து வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: "நான் யாரையும் கைவிடவில்லை...பிரச்னைக்கு காரணம் என் சித்தப்பா தான்": ஸ்ரீதர் வேம்பு குடும்பத்தில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details