தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இஸ்திரி கடைகளை குறிவைத்து திருட்டு.. 40 பெட்டிகளுடன் சிக்கிய பலே திருடன் கூறிய காரணம்? - Esplanade Police Station

பிரபல பவுடர் ரவியின் கூட்டாளியாக இருந்து திருடனாக மாறி 40 இடங்களில் இஸ்திரி பெட்டிகளை குறிவைத்து திருடிய திருடன் திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

iron box
இஸ்திரி பெட்டிகளை திருடும்போது சிசிடிவியில் சிக்கிய பலே திருடன்

By

Published : Jul 13, 2023, 11:04 PM IST

சென்னை:சென்னை அப்பாவு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராசு மற்றும் சத்தியா தம்பதியினர். இவர்கள் அதே தெருவில் சாலையோரத்தில் சலவை கடை நடத்தி வருகின்றனர். கடந்த 6-ஆம் தேதி அன்று கடையை மூடி விட்டு மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது, அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த இஸ்திரி பெட்டி மற்றும் சில்லறை பணம் திருடுபோனது தெரியவந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதே போல பெரிய தெருவில் இரண்டு இடங்களில் இஸ்திரி பெட்டி கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைப்பெற்றதாக வந்த தொடர் புகாரையடுத்து உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

குறிப்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் வரும் டிப்டாப் ஆசாமி ஒருவர் இஸ்திரி பெட்டிகளை திருடியது தெரியவந்தது. இருசச்கர வாகன எண்ணை வைத்து போலீசார் தேடி வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை ஐஓசி தெருவை சேர்ந்த அஜயன்(43 )என்பவர் இந்த திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரனையில் காசிமேட்டில் பிரபல ரவுடியாக இருந்த பவுடர் ரவியின் கூட்டாளியாக இருந்ததாகவும், பின்னர் திருட்டு வழக்குகளில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. கடைசியாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று விட்டு வெளியே வந்த நிலையில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும், பெரிய திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டால் போலீசார் பிடித்து விடுவார்கள் என இஸ்திரி கடைகளில் உள்ள இஸ்திரி பெட்டிகளை திருடி, அதனை இரண்டாக உடைத்து பழைய இரும்பு கடைகளில் போட்டு, ஒவ்வொன்றும் 7 கிலோ வரை வரும் என்பதால் அதனை எடைப்போட்டு வரும் பணத்தில் செலவிட்டு வந்ததும், இஸ்திரி பெட்டி என்பதால் புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என திருட்டில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தேனாம்பேட்டை, அபிராமபுரம், மைலாப்பூர் உள்ளிட்ட 40 இடங்களில் இஸ்திரி பெட்டிகளை குறிவைத்து திருடியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரால் பாதிக்கப்பட்ட சத்தியா என்பவர் கூறியதாவது, "கடையில் இருந்த இஸ்திரி பெட்டியை திருடியதால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாகவும், இதனால் கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்களை இழந்ததாக கூறினார். மேலும், தினசரி 100 ரூபாய்க்கு வாடகைக்கு இஸ்திரி பெட்டியை வாங்கியே தொழில் செய்து வந்ததாக கூறிய அவர் காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் வாதம்!

ABOUT THE AUTHOR

...view details