சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " எடப்பாடி பழனிசாமி தனது கடந்த கால தவறுகளை மறைக்க நேற்று தனது வயிற்றெரிச்சலை ,பேட்டி எனும் பெயரில் பொய் மூட்டையாக அவிழ்த்து விட்டுள்ளார். திமுக ஆட்சியில் நிர்வாகம் உட்பட அனைத்து துறையிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். கடந்த தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக இருந்தது கோவை . தற்போது கோவை மக்கள் திமுக ஆட்சியை வியந்து பாராட்டி, தேர்தலில் தவறு செய்ததை உணர்ந்து உள்ளாட்சியில் வெற்றியை தந்துள்ளனர்.
கோவையில் ஆச்சரியம் தரும் வகையில் அதிகமானோர் முதலமைச்சருக்கு வரவேற்பு தந்ததை தாங்க முடியாமல் இல்லாது பொல்லாததை பேட்டியாக கூறியுள்ளார் பழனிசாமி. திமுக ஆட்சியில் அதிமுகவின் எந்த திட்டத்தையும் கைவிடவில்லை.வேலுமணிக்கு சொந்தமானவர்கள் வெள்ளளூரில் பல ஏக்கர்களை வளைத்து போட்டுள்ளதால் அங்கு பேருந்து நிலையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு முறையாக நிதி ஒதுக்கவில்லை. பேருந்து நிலையத்திற்கு 61 ஏக்கர் தேவை , ஆனால் 50 ஏக்கர் நிலம்தான் கைப்பற்றினர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 95 சதவீத பணிகள் நிறைவு. கடந்த ஆட்சியில் அதிமுக அறிவித்த எந்த திட்டத்துக்கும் பணம் ஒதுக்கவில்லை.
கோவை விமான நிலையத்திற்கு 1500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக அரசு நிதியே வழங்கவில்லை என எடப்பாடி பச்சையாக பொய் சொல்கிறார். ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக அறிக்கை தயாராகிவிட்டதை தெரிந்து கொண்டு , ஊழலை மூடி மறைக்க பொய்களை கூறி வருகிறார் எடப்பாடி.
கருணாநிதியை அடக்கம் செய்ய எடப்பாடி வீட்டிற்கு ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் சென்று மெரினாவில் இடம் கேட்டார் , ஆனால் அவர்கள் மறுத்தார்கள். பின்னர் நீதிமன்றம் சென்று இரவில் வாதாடி இடம் பெற்றோம். ஆனால் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையே எங்கள் ஆட்சியில் அரசு விழாவாக நடத்தி வருகிறோம். ஜெ. பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டுமா என்பது கேள்விக்குறிதான்..? இருந்தாலும் கடந்த ஆட்சியின் இறுதி உத்தரவான அதை கடைபிடித்து வருகிறோம். குறுகிய எண்ணம் ஒன்றுமே இல்லாமல் இருந்தவர்களை கோடீஸ்வரர்களாக்கிய ஜெ- வின் கோடநாடு இல்லத்தையே எடப்பாடி ஆட்சியில் காப்பாற்ற முடியவில்லை. தங்களது தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் சட்டம் ஒழுங்கு பற்றி பேசலாமா..?