சென்னை:நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழ்நாட்டின் வளிமண்டல பகுதியில் மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது. இந்தப் பகுதி அடுத்து வரும் தினங்களில் வடக்கு நோக்கி நகரக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. 10 இடங்களில் கனமழையும், நான்கு இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். மேலும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், ஆகஸ்ட் 4ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். எனவே மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.