சென்னை குறளகத்தில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி கதர் சிறப்பு விற்பனைத் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கதர்த்துணி வழங்கி சிறப்பித்தனர். பின்னர் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நீட் தேர்வை பொருத்தவரை தமிழ்நாட்டிற்குத் தேவை இல்லை என்பது தான் அரசின் நிலைப்பாடு. இதைத் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வு மத்திய அரசு நடத்துகிறது, இதில் ஆள்மாறாட்டம் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
நடிகர் கமல் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறார், நாட்டு மக்களின் நலனில் கவனம் செலுத்துவதில்லை. வசூல் ராஜா எம்.பிபி.எஸ் படத்தின் மூலம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்பதை முதலில் வித்திட்டவர் கமல் தான்.