நக்கீரன் கோபால் கைதான போது பதியப்பட்ட வழக்கு, மே17 இயக்கம் சார்பில் நடந்த பேரணியில் கலந்துகொண்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கு, காவிரி உரிமையை காப்பாற்ற நடந்த அறப்போரில் கலந்துகொண்டதற்காக பதியப்பட்ட வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் விசாரணைக்காக சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜரானார். வழக்கு விசாரணையை முடித்துக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "இரண்டாவது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்ட போது அவரை சந்திக்க சென்றதற்காக என்னை கைது செய்து என் மீது போடப்பட்ட வழக்கு, 2018 ஆம் ஆண்டு ஈழ தமிழர்களுக்காக சென்னை கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்காக மே 17 இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கைது செய்ப்பட்ட வழக்கு, காவிரி உரிமையை காப்பாற்ற சென்னை எழுப்பூரில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட மூன்று வழக்குகள் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்ற நகல்கள் தரப்பட்டன. நவம்பர் 13ஆம் தேதிக்கு இந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டது.
முல்லைப் பெரியார் பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் திருவனந்தபுரம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பயனற்ற முறையில் மீண்டும் அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 85 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனத்தை இழக்கும் ஆபாயம் நேரிடும். உச்ச நீதிமன்றம் பரிந்துரையின் பேரில் குழு அமைத்து ஆய்வு செய்து புதிய அணை கட்ட தேவையில்லை, பென்னி குயிக் அணையே வலுவாக இருக்கிறது என கூறியிருக்கின்ற நிலையில், புதிய அணை தேவையில்லை என்ற நிலைபாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்க வேண்டும்.