சென்னை: திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு திமுகவினர் மீது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் வகையில் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளதாக கூறி திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடியும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ரூ.100 கோடியும் கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். மேலும் 48 நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டை பரப்பியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதற்கு என் மீது ஆருத்ரா மோசடி குறித்து தவறான தகவலை கூறியதற்காக ஆர்.எஸ்.பாரதி எனக்கு ரூ.500 கோடியும் அதற்கு மேல் ரூ.1ம் கூடுதலாக தர வேண்டும் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என வழக்கறிஞர் பால் கனகராஜ் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “நீங்கள் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் என்னுடைய தரப்பினர்(அண்ணாமலை) மறுக்கிறார். அவர் உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வைத்துள்ளார். திமுகவிற்கு மக்கள் மீது நலனில் அக்கறை இல்லை. 1969 முதல் 1976 வரை ஆட்சியில் இருந்த காலத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுகதான் என என்னுடைய தரப்பினர் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் பாஜகவில் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அதனால் தான் அண்ணாமலை இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் என்ற கருத்தை அண்ணாமலை மறுக்கிறார். நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது எனக் கூறுகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி நேர்மையாகவும், ஊழலை வெளிப்படுத்தும் விழிப்புணர்வுக்காகவும் திமுவினருடைய சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இந்த சொத்துப்பட்டியலை விடா முயற்சியின் மூலம் அண்ணாமலை தயார் செய்துள்ளார். இது உள்நோக்கம் கொண்டதோ அல்லது கற்பனையானவையோ இல்லை. மேலும் உங்கள் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார்.
உதயநிதியிடமும், சபரீசனிடமும் ரூ.30,000 கோடி பணம் மட்டுமே இருப்பதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ அண்ணாமலை கூறிய ஊழல் பட்டியலுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. அதிமுகவினருடைய சொத்துப்பட்டியலை வெளியிட கேட்பது சம்பந்தம் இல்லாத ஒன்று என அண்ணாமலை கூறுகிறார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.