சென்னைராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரோனா காலகட்டம் என்பதால் கடந்த முறை பொதுக்குழுக்கூட்டம் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமாக நடைபெற்றது. இந்தமுறை ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. எல்லோருக்கும் மத்தியமாக இருக்கும் என்பதால் திருச்சியில் பொதுக்குழுவை நடத்தலாம் என திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அம்மாவின் நினைவாக இந்த முறை ஸ்ரீ வாருவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அரசாக இருந்தாலும் சரி... மாநில அரசாக இருந்தாலும் சரி... பொதுவாக ஜிஎஸ்டி என்பது ஏழை எளிய மக்களைப் பாதிக்கிறது. மக்களால் ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு வரியைக்குறைக்க வேண்டும் என வேண்டுகோள்விடுக்கிறேன். ஜிஎஸ்டி என்பது தனி அமைப்பாக செயல்படுகிறது என மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால் 33 விழுக்காடு மத்திய அரசுதான் பிரதானமாக இருக்கிறது. தமிழ்நாடு அதிகப்படியாக வரி செலுத்துகிறது.
ஒரு சில மாநிலங்கள், மத்திய அரசு கொடுக்கின்ற தொகையை வைத்து மாநிலங்களை நடத்துகிறது. அதனால் இதில் தமிழ்நாடு மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது என நினைக்கிறேன். பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் இணைந்துகூட்டு முயற்சியாக கட்டுப்படுத்த வேண்டும். அதனைக்குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கோரிக்கை ஆகும்.
தமிழ்நாட்டிற்குப் பாரதப்பிரதமர் நிகழ்ச்சிக்காக வரும்போது அவரைப் பாராட்டிப்பேசுவதை நான் வரவேற்கிறேன். கடந்த முறை அரசு நிகழ்ச்சிக்காக வந்தபோது திராவிட மாடல் என முதலமைச்சர் குறிப்பிட்டுப்பேசியது ஏற்புடையதாக இல்லை. இந்தமுறை அவர் பேசியது ஏற்புடையதாக இருந்தது. கனல் கண்ணன் விவகாரத்தில் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை தவிர, மற்ற அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். கடவுள் மறுப்புக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத் தவிர அவரது சமூக நீதியால் தான் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது என்பது உண்மை.