சென்னைஅண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பருவ மழைக் காலத்தில் மின் விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க செய்யப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "வட கிழக்குப்பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி இதுவரை 14 லட்சத்து 69 பராமரிப்பு சிறப்புப்பணிகள் நடைபெற்றுள்ளன. 40 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 32ஆயிரத்து 685 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
18,380 மின் மாற்றிகள் கையிருப்பில் உள்ளன. 2 லட்சம் மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளன. மின் புகார்களை பொறுத்தவரை 99 விழுக்காடு புகார்கள் உடனுக்கு உடன் சரி செய்யப்படுகிறது. மீதமுள்ள புகார்கள் விரைவில் சரி செய்யப்படும். அதற்காக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர மையத்தில் தற்போது, ஒரே சமயத்தில் 75 புகார்களை அணுக வழி வகை செய்யப்பட்டுள்ளது.