சென்னை: தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் வளர்ந்து வரும் அரசியல் தலைவர்களுக்கான தலைமை பண்பு, அரசு கொள்கை புரிதல், திட்டமிடுதல் மற்றும் செயல்திட்டம் குறித்த 'தலைவா' என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கை தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 'அரசியல் முன் அனுபவம் இல்லாமல் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல்முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து, இரண்டாவது முறையாக மீண்டும் 2021ஆம் ஆண்டு தேர்தலில், வாய்ப்பு வழங்கப்பட்டதில் வெற்றி பெற்றேன். பின்னர் முதல்முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதில் மிக முக்கியமான துறையான நிதித்துறை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிதியமைச்சர்கள் மிக மூத்த தலைவர்களாக, கட்சியில் 2ஆம் இடத்தில் இருக்கும் தலைவர்களுக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக தலைவர் தனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளார். அதனால் சிறப்பாக செயலாற்ற வேண்டியது எனது கடமை. தற்போதைய காலகட்டத்தில் அரசியல் வேகமாக மாறி வருகிறது. இளைஞர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்' எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'மாநில உரிமை, ஜி.எஸ்.டி தொடர்பாக நான் பேசுவது குறைவு தான். ஆனால், இதே கருத்தை குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அதிகமாக பேசினார். குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது மாநில உரிமை, ஜிஎஸ்டி பிரச்னைகள் போன்றவை குறித்து அதிகமாகப் பேசியுள்ளார். ஆனால், அவர் பேசியதை விட 50% குறைவாகத் தான் நாங்கள் பேசியுள்ளோம். ஹரியானா போன்ற வடமாநிலங்களில் உள்ள மக்களையும் மேம்படுத்த வேண்டும்.