சென்னை: தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் தாமதம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(மார்ச்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத்தில் உருவாகும் தென்பெண்ணையாறு அம்மாநிலத்தில் 112 கிலோ மீட்டர் மட்டுமே பாய்கிறது. அதைவிட 50 விழுக்காடு அதிகமாக 180 கிலோ மீட்டர் தொலைவுக்கு தமிழ்நாட்டில் பாயும் தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை வளப்படுத்திவிட்டு கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. தென்பெண்ணையாற்றின் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவதில் கர்நாடகம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை.
இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தென்பெண்ணையாறு சிக்கலுக்கு தீர்வு காண 3 மாதங்களில் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ஆணையிட்டது. அதன்படி நேற்றைக்குள் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதன் கடமையை இதுவரை நிறைவேற்றவில்லை.
நடுவர் மன்றம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதற்கு முன்பாக கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு, நடுவர் மன்றம் குறித்து முடிவெடுக்கவில்லை.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக செயல்படுகிறது என்றால், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நடுவர் மன்றத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு மத்திய அரசு செயல்படாததற்கு காரணம் அரசியல்தான். கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 24ஆம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதற்கான தேர்தல் அட்டவணை எந்த நேரமும் வெளியிடப்படக்கூடும்.