சென்னை:பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை பகுதியில் உள்ள ஜெ.எல்.கோல்டு பேலஸ் கடை உரிமையாளர் ஸ்ரீதர் அளித்த புகாரில், "சென்னை பெரம்பூர் சாலையில் உள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், முதல் தளத்தில் கடந்த 8 வருடமாக சொந்தமாக ஜெ.எல் கோல்டு பேலஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று (பிப்.09) இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றதாகவும், இன்று (பிப்.10) காலை 9 மணிக்கு கடையை திறக்க சென்ற போது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடையினுள் புகுந்த மர்ம நபர்கள் லக்கர் ரூமின் கதவுகள் வெல்டிங் மெஷினால் வெட்டி 9 கிலோ எடையிலான தங்கம் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடையின் லாக்கரை உடைத்து திருடப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் கடையில் கடந்த 3 மாதங்களாக காவலாளி இல்லாததை நோட்டமிட்டு திருட்டுச் சம்பவம் நடந்திருப்பதாகவும், கடையின் உட்புறம் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர் சாதனத்தையும் மர்ம நபர்கள் கொள்ளயடிதுச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.