தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீவுத் திடலில் பட்டாசு விற்பனை டெண்டர் விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - சென்னை

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்துவதற்காக கோரப்பட்ட டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 5:08 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். இந்த வருடம் வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வது தொடர்பாக கோரப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், "சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை தீவுத் திடலில் பட்டாசு மொத்த விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் விற்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனைக்காக கோரப்பட்ட இரு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, இறுதியாக கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டது.

இதற்காக 20 லட்சம் ரூபாய் முன்பணம், உத்தரவாத தொகை 2 லட்சம் ரூபாய், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில், எந்த தகுதியும் இல்லாத சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச்சங்கம் என்ற புதிய சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், போலி ஆவணங்களை சமர்ப்பித்த அந்த சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்தது ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்ட விதிகளுக்கு முரணானது" என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தங்கள் நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்கவிடாமல் தடுத்ததுடன், புதிய சங்கத்துக்கு டெண்டரை இறுதி செய்ய அரசு அவசரம் காட்டி வருவதால், இந்த டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தங்கள் நிறுவனத்தின் டெண்டரை ஏற்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி அனிதா சுமந்த், அக்டோபர் 20ஆம் தேதிக்குள் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'கும்குவாட்' பழம்பத்தி தெரியுமா? பல உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.!

ABOUT THE AUTHOR

...view details