கேள்வி: குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் தற்போதுவரை சிறப்பாக நடந்து வந்தாலும், இறுதிக்கட்ட முயற்சியாக இப்போது பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களைத் தொடக்கத்திலேயே பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்களே?
பதில்: அனைவரின் சிந்தனையும் ஒன்றுதான். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தங்களின் ஆழ்மன விருப்பமாக வெளிப்படுத்துகிறார்கள். இறை நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் நம்புகிற கடவுள்களிடம் மனமுருகி வேண்டுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, அதே நேரத்தில் இது ஒரு அரிதான நிகழ்வு என்ற கண்ணோட்டமே அரசிடமும், அதிகார வர்க்கத்திடமும் இருக்கிறது. ஆகவேதான், இதற்கான முறைப்படுத்தப்பட்ட கொள்கை இன்னும் உருவாக்கப்படவில்லை.
2010ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாகக் கொள்கைகளும் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இன்னும்கூட மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, இது தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தவில்லை.
கொள்கை உருவாக்கப்பட்டால் பல்வேறு அம்சங்களும் இதில் சேர்ந்துவிடும். ஒவ்வொரு ஊரிலும் மண் தன்மை மாறுபடும். இது குறித்த பாரம்பரிய அறிவு அங்குள்ள உள்ளூர் மக்களுக்கே இருக்கும். அவர்களுடன் சேர்ந்து துறைசார்ந்த நிபுணர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இப்போது நடுக்காட்டுப்பட்டியில், முதலில் ஒன்றை முயல்கிறார்கள், அது சரிவரவில்லை என்றால் மாற்று ஏற்பாடு குறித்துச் சிந்திக்கிறார்கள். இதுவே, கொள்கை இருந்திருந்தால், மீட்புப் பணிகளில் எந்தெந்த கட்டங்களில் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் தயாராக இருந்திருக்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்கும்.
அதிகாரம் என்பது உள்ளாட்சி அமைப்புகளிடம் அளிக்கப்பட வேண்டும். மீட்புப் பணிகள் பயன்படுத்தப்படும் கருவிகள் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும். இது எப்போதாவது நடக்கும் சம்பவம் என்று பார்க்காமல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் சம்பவம் என்றே பார்க்க வேண்டும்.
ரிக் இயந்திரத்தை வரவழைப்பது போன்ற இறுதிக்கட்ட முயற்சிகளை நாம் முதல்கட்டத்திலேயே எடுக்க வேண்டும். அப்போதுதான், விலைமதிப்பில்லாத நேரம் வீணாவதைத் தடுத்து நிறுத்தலாம்.
இவையனைத்தையும் ஒருங்கிணைத்து கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்டு அதன்படி செயல்பட வேண்டும். வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, கொள்கை இருந்தால்தான் தெளிவு இருக்கும்.
கேள்வி: விண்வெளிக்கு நாம் ஆயிரம் கோடி செலவழிக்கிறோம். அது முக்கியம்தான் என்றாலும், ஏன் எளிய மக்களுக்குப் பயன்தரும் அறிவியலுக்குப் (ஆழ்துளையில் குழந்தைகள் சிக்கிக் கொள்வது போன்ற...) பெரிய கவனத்தை அரசு செலுத்துவதில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறதே?
பதில்: விண்வெளி ஆய்வுக்கு நாம் செலவழிக்கத் தேவையில்லை என்றுகூட சிலர் கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை அதுவும் தேவைதான். செயற்கைக் கோள்கள் இருப்பதால்தான் நடுக்காட்டுப்பட்டியில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பல்வேறு இடங்களிலிருந்தும் அறிந்து கொள்ளமுடிகிறது.
நம் கோரிக்கை ஒன்றுதான், அதற்கு நிதியை ஒதுக்கீடு செய்வதுபோல் ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் அறிவியலுக்கும் உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
நமக்கு மேலே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலும் என்ன உள்ளது என்று தெரிந்துவைத்திருக்கும் நாம், காலுக்குக் கீழ் என்ன உள்ளது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது குறித்த ஆராய்ச்சிகளுக்கும் அரசுதான் முதலீடுகளைச் செய்ய வேண்டும்.
இப்போது நடைபெறும் ஆராய்ச்சிகள் இயற்கை வளங்களை எப்படி அழிப்பது என்பது குறித்துதான் நடந்து வருகிறதே தவிர, இயற்கையை எப்படிப் புரிந்துகொண்டு முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் இல்லை. அதற்கான விலையைத்தான் இப்போது நாம் கொடுத்துவருகிறோம். இது குறித்த அறிவு அறிஞர்களிடம் மட்டுமே தேங்கியிருந்து விடாமல் வெகு மக்களிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.