தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு - திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி

நவம்பர் 1ஆம் தேதி முதல் திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு
திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி

By

Published : Oct 23, 2021, 8:00 PM IST

Updated : Oct 23, 2021, 10:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அக்டோபர் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (அக்.23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாள்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பொருள்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி

அதேபோன்று, அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் (both contact and non contact sports) நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக (Therapeutic purposes) நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.

மேலும், பின்வரும் செயல்பாடுகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

1. அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.

2. திரையரங்குகள் 100 விழுக்காடு பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

3. கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

4. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பார்வையாளர்களுக்கு அனுமதி

5.மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, 100 விழுக்காடு இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

6. அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள், மையங்கள் 100 விழுக்காடு பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

7. தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

8. கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

9. கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

10. கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

11. கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

12. நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

13. கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

14. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.

15. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

16. கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம்!

Last Updated : Oct 23, 2021, 10:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details