தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இன்று (ஏப்.20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பில் உள்ளனர். முன்னதாக 50% இருக்கைகளே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவால் ரசிகர்கள் வரவு குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறுக்கிழமையில் முழு ஊரடங்கால் காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இன்று (ஏப்.20) தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சில தினங்களுக்கு முன் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், திரையரங்குகளை மூடப்போவதாக அறிவித்தார். ஆனால் இன்றைய கூட்டத்தில் திரையரங்குகளை மூடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.