சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், '9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோவில் 2 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இஸ்ரோவின் திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்தும், நவீன மேம்பாடு குறித்தும் ஒவ்வொரு பரிசோதனைக் கூடங்களுக்கும் அழைத்துச் சென்று விளக்கி பயிற்சியளிக்கப்படும். கோடை விடுமுறையில் நடத்தப்படும், இச்சிறப்பு பயிற்சியில் எல்லாப் பள்ளி மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.
ககன்யான் திட்டப்பணி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் செல்லக்கூடியவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 மாத பயிற்சிக்காக ரஷ்யாவிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் ஆள்கள் இல்லாத விண்கலம் முதலில் அனுப்பப்படும். அதில் ரோபோட்டை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர், அடுத்த ஆறு மாதத்தில் மனிதர்களைக் கொண்ட விண்கலம் அனுப்பப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதேபோல் சந்திராயன்-3 திட்டப் பணிகளும் நல்லபடியாக நடந்து கொண்டு வருகிறது.