திருச்சி:தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று திருவளர்ச்சோலை அருகே கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை திருச்சி மாவட்ட காவல் துறையினர் விசாரித்து வந்தனர். பின்னர் சிபிசிஐடி காவல் துறையினரின் வசம் வந்த இந்த வழக்கு, தொடர்ந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், வழக்கில் எவ்வித முன்னேற்றம் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடியின் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. மேலும் இதன் எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய இவ்வழக்கின் விசாரணையில், கொலை நடந்த காலகட்டத்தில் அந்த இடத்தைச் சுற்றியுள்ள செல்போன் டவர்களில் ஆக்டிவாக இருந்த சந்தேகத்துக்கிட்டமான செல்போன் எண்களைக் கொண்டு, 12 பேரை பட்டியலில் வைத்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சந்தேக பட்டியலில் உள்ள திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ், செந்தில், கலைவாணன், திலீப், சுரேந்தர் ஆகியோரிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் கூடத்தில் கடந்த ஜன.18 மற்றும் 19 அன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.