சென்னைஎழும்பூரில் ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் 5ஆவது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியார்களிடம் பேசிய மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன், “அரசுப்பணியில் இருக்கும் மருத்துவர்கள் இறந்தால் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்ற அரசாணை 354இன் படி ஊதிய உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கொடுப்பதைப் போன்று பழைய ஊதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி மூலமாக அரசு மருத்துவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும். எம்ஆர்பி மூலமாக அரசு மருத்துவர்களை நியமிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. கடந்த காலங்களில் நடைபெற்றதால், அதையெல்லாம் தவிர்ப்பதற்காக டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு மருத்துவர்களுக்கான தேர்வை நடத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் முன்கூட்டியே அனுமதி பெற்று வரும் வகையில் டோக்கன் முறையை கொண்டு வரலாம். அவசரமாக சிகிச்சையளிக்க வேண்டிய நோயாளிகள் எப்போது வந்தாலும் சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறோம். மேலைநாடுகளில் உள்ளது போல், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனுமதிபெறும் முறையை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தால், மருத்துவர்களுடன் நோயாளிகள் காத்திருப்பதற்காக சண்டையிடும் நிலையை தவிர்க்கலாம்.
மருத்துவர்கள் கரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். சில மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவர்களை ஒருமையில் பேசுவதாகவும்; இதனால் மன உலைச்சல் ஏற்படுவதாகவும்; இது தொடர்பாகப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து புகார்கள் வந்துள்ளன. இதை முதலமைச்சர் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:மருத்துவத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்