சென்னை: பெருங்களத்தூர் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரமிளா (வயது 65). இவர் இரவு உணவு அருந்தி விட்டு படுக்கை அறைக்கு தூங்குவதற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் பிரமிளா படுக்கை அறையில் இருந்து வெளியில் வராததால் பிரமிளாவின் மருமகள் படுக்கையறைக்கு சென்று பார்த்த போது, காதுகள் இரண்டும் அறுக்கப்பட்ட நிலையில் சுயநினைவின்றி உயிருக்கு போராடி கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின் புறத்தில் உள்ள பால்கனி வழியாக ஏறி, பின்பக்கம் கதவு வழியாக வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பிரமிளாவை எழுப்பி காதில் அணிந்திருந்த நகையை தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு நகைகளை பிரமிளா தர மறுக்கவே ஆத்திரமடைந்த மர்ம நபர் பிரமிளாவின் வாயில் துணியை வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். அது மட்டுமின்றி அறையில் இருந்த டேபிள் ஃபேனின் ஒயர் மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
அதன் பின்னர், ’காதில் அணிந்திருந்த நகைகளை ஒழுங்காக கொடுத்து விடு’ எனக் கூறியும், தர மறுத்ததால் மர்ம நபர் பிரமிளாவின் இரண்டு கம்மலையும் கழட்ட முயற்சித்தும், கழட்ட முடியாததால் காதில் இருந்த இரண்டு கம்மல்களையும் இழுக்கும் போது இரண்டு காதும் அறுந்து விட்டது. அப்போது கையில் வந்த இரண்டு கம்மல்களையும் எடுத்துக் கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என போலீசார் விசாரனையில் தெரியவந்தது.
மேலும், விசாரணையில் பிரமிளா காதில் அணிந்திருந்த கம்மல்கள் இரண்டும் கவரிங் நகை எனவும்,
கொள்ளையனுக்கு கவரிங் நகைக்கும், தங்க நகைக்கும் வித்தியாசம் தெரியாமல் தங்க நகை என்று நினைத்து கவரிங் நகையை அறுத்து சென்றுள்ளான் என தெரியவந்தது.
இதையும் படிங்க:கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்:மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!