சென்னை: தமிழ்நாட்டில் முதன்முதலில் கரோனா தொற்று இருப்பது கடந்த மார்ச் 7, 2020ஆம் ஆண்டு தெரியவந்தது. அப்போது ஒரே ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஒரு நாள் மக்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் மார்ச் 22ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
அடுத்த நாளே, கரோனா பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் மார்ச் 24 மாலை ஆறு மணி தொடங்கி, மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் செய்தி தொடர்பாளர் ராமதாஸ் பேசுவது தொடர்பான காணொலி ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு?
இருப்பினும் மார்ச் 24ஆம் தேதி இரவே இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. பின்னர் கரோனா அச்சம் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.
உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள் போன்றவையும் ரத்து செய்யப்பட்டன. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த தினசரி ஊதியம் பெறக்கூடிய தொழிலாளர்கள் பலரும் உணவுத் தேவையை சமாளிக்கவே அல்லல்படத் தொடங்கினர்.
கரோனாவின் தாக்கத்தால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் திரைத்துறையே ஸ்தம்பித்துப் போனது. இதனால் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு திரைத்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
திரையரங்குகளைத் திறக்க அனுமதி
ஒரு வழியாக கரோனா முதல் அலைக்குப்பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தொழில்துறைகள் மீண்டெழத் தொடங்கின. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு வகித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு, கரோனா விதிகளைப் பின்பற்றி திரையரங்குகளைத் திறந்து கொள்ள அனுமதியளித்தது.
அதனைத் தொடர்ந்து தமிழின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் நடித்த ”மாஸ்டர்” திரைப்படம் மட்டும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட எந்த தமிழ் திரைப்படங்களும் பொருளாதார ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை. பின்பு மீண்டும் கரோனா இரண்டாம் அலையால் திரையரங்குகள் மூடப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்கவும், படப்பிடிப்பை நடத்திக் கொள்ளவும் ஆகஸ்ட் மாத இறுதியில் அனுமதியளித்தது.
தோல்வியை சந்தித்த திரைப்படங்கள்
இதனையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ”தலைவி”, விஜய் சேதுபதியின் ”லாபம்” ஆகிய படங்கள் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்ட இரண்டு படங்களும் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.
அதற்கடுத்த வாரத்தில் விஜய் ஆண்டனியின் ”கோடியில் ஒருவன்”, லாஸ்லியா நடித்த ”பிரண்ட்ஷிப்” உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் மட்டும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இருந்தபோதும் போதுமான அளவு மக்கள் கூட்டம் வராததால் பொருளாதார ரீதியாக சுமாரான வெற்றியே பெற்றது.
இதற்கு கரோனா காலத்தில் அதிகரித்த ஓடிடி தளங்களின் வரவு, ஆக்கிரமிப்பு ஆகியவையே காரணமாக சொல்லப்பட்டன. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மக்கள் வருகை குறைந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பொருளாதார நிலையால் சாமானியனின் வருமானத்தில் ஏற்பட்டுள்ளத் தாக்கமே ஆகும்.
நொடிந்து போன திரைப்பட நிறுவனங்கள்
உணவுக்கே வழியில்லாதவன், கேளிக்கைக்கு எப்படி பணம் செலவழிப்பான் என்பதே பலராலும் முக்கிய வாதமாக வைக்கப்படுகிறது.
இதுகுறித்து சினிமா பிஆர்ஓ ஆதம்பாக்கம் ராமதாஸ் பேசுகையில், “நாம் கரோனா நோய்த் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் மன உளைச்சல், அழுத்தத்தில் இருந்து வருகிறோம்.
முதல் அலை முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பொழுது மக்கள் திரையரங்குகளை நோக்கி குடும்பத்துடன் வந்தனர். அப்போது வெளியான சில படங்கள் வெற்றிபெற்றன. அதன் பின்னர் வந்த இரண்டாவது அலையால் மக்கள் நிலைகுலைந்து போயினர். பல திரைப்பட நிறுவனங்கள் நொடிந்து போனது. பல துறைகளைச் சேர்ந்தோரின் வேலை வாய்ப்பும் பறிபோனது.
மக்களின் பொருளாதார தொய்வே காரணம்
ஆள்குறைப்பு, சம்பளம் குறைப்பு போன்ற காரணிகள் மக்களைக் கடுமையாக சோதித்தன. இரண்டாம் அலைக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியிடப்பட்ட போதும், எந்த படமும் வெற்றியடையவில்லை. இதற்கு படத்தின் கதை சரியல்லாதது மட்டுமே காரணமல்ல.
பொருளாதார ரீதியாக மக்கள் தொய்வடைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம். பணம் இருந்தால்தானே மக்கள் திரையரங்குகளை நோக்கி வருவார்கள். மேலும் சில மாதங்களுக்கு இதே நிலையே நீடிக்கும். மக்கள் செழிப்படையும்போது, திரையரங்குகளும் கூட்டத்தால் நிரம்பிவழியும்” என்றார்.
மீண்டும் தமிழ்நாட்டில் திரைத்துறை கோலோச்சும் காலம் எப்போது? பொறுத்திருந்து பார்போம், நம்பிக்கையுடன்...
இதையும் படிங்க:அத்துமீறும் ரசிகர்கள் - விஜய் மக்கள் இயக்கம் கண்டனம்!