சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று (28.10.2022) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, நிலைக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்படப்பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்தான அறிவிப்பில், 'பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-4 , கோட்டம் -34 முதல் 48 வரை துப்புரவுப்பணி போதுமான நிரந்தர பணியாளர்கள் இல்லாததால் தேசிய நகர்ப்புறவாழ்வாதார இயக்கம்(NULM) குழுக்கள் மூலம் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களின் பணிக்காலம் வரும் 30.09.2022உடன் முடிவடைவதால், மேலும் ஆறு மாதத்திற்கு ( 01.10.2022 முதல் 31.03.2023 வரை) துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்களை பணியமர்த்தியமைக்கு பின்னேற்பு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையின் பழமை வாய்ந்த பெரம்பூர், ஆர்.கே.நகர், வியாசர்பாடி மற்றும் இராயபுரம் போன்ற முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியதாகும். மேலும், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய 35.5 கி.மீ., நீளமுள்ள 49 பேருந்து சாலைகள் மற்றும் 39,365 கி.மீ., நீளமுள்ள 2,846 உட்புறச்சாலைகளை, பெருநகர சென்னை மாநகராட்சியின் பணியாளர்களைக்கொண்டு தனியாக தினமும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இது தவிர, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-4-க்குட்பட்டப் பகுதிகளில் அரசு சின்ன ஸ்டான்லி மருத்துவமனை, தண்டையார்பேட்டை ரயில் நிலையம், முல்லை நகர் பேருந்து நிலையம், காசிமேடு சுடுகாடு, முல்லை நகர் சுடுகாடு, சீதாராம் நகர் சுடுகாடு, பூங்காக்கள், விளையாட்டுத்திடல்கள், ஓட்டல்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் இலவச பொதுக்கழிப்பிடங்கள், மட்கும் குப்பை, மட்காத குப்பைகளைச்சேகரித்து தரம் பிரிக்கும் பணிகள் ஆகியவற்றைச்சீரிய முறையில் சுத்தமாகப் பராமரித்திட வேண்டும்.
மேற்கண்டப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக வசிப்பதாலும் குப்பைகள், அதிக அளவில் அகற்ற வேண்டி உள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள 72 நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் 947 தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (NULM) பணியாளர்களை மட்டுமே கொண்டு துப்புரவு பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது.