சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராகப்பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகவும் தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சேபனைகளை தலைமை நீதிபதி அமர்வு, நிராகரித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பொறுப்புத்தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நேற்று (செப் 20) உத்தரவிட்டது. மேலும், வேலுமணி தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.