சென்னை:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு ஜூலை 12 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும், அந்தப் பணியிடத்திற்கு ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் மேலும் ஜூலை 12 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க கால நீடிப்பு வழங்கி உள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டாரகக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டாரக்கல்வி அலுவலர் பணியில் 33 இடங்கள் நிரப்பப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை நீடித்து அறிவித்துள்ளது. அதன்படி வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் அவகாசம் கேட்டுள்ளதால், ஜூலை 12 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் போது செயல்பாட்டில் உள்ள இமெயில் ஐடி, செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தேர்வுக் கட்டணமாக எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 300 ரூபாயும் பொது பிரிவினருக்கு 600 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.