தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்குறள் முற்றோதல் போட்டியில் 124 பேர் வெற்றி - பரிசளித்த முதலமைச்சர்! - திருவள்ளுவர் சிலை

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுள் 9 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பரிசு வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்

By

Published : Jun 30, 2023, 7:40 PM IST

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிடும் அடையாளமாக 9 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.15,000 க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டி

திருக்குறள் தமிழர்களின் தலையாய பெருநூலாகும். அதன் ஒன்றே முக்கால் வரிப்பாக்கள் அரிய, பெரிய, சிறந்த சிந்தனையை தூண்டும் எழிலோவியங்கள் ஆகும். கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய் - காணார்க்கும், கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய் – வல்லார்க்கும், மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய் – மதியார்க்கும், மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியாய் - நல்லார்க்கும், பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய் - எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு திருக்குறள்.

இத்தகைய சிறப்பு மிக்க திருக்குறளை இயற்றிய வான்புகழ் கொண்ட அய்யன் திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் எல்லாம் திருவள்ளுவரின் படத்துடன் திருக்குறளினைப் பொறிக்கப்பட்டுள்ளது, அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவரின் திருவுருவப் படம் நிறுவப்பட்டுள்ளது, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைந்துள்ளது, அகிலம் போற்றும் அய்யன் திருவள்ளுவருக்கு குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

அந்த வகையில், ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படும் நாளுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் திருநாள் என்று அறிவித்து, 2000ஆம் ஆண்டு முதல் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு குறள் பரிசு வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆண்டுதோறும் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 812 மாணவர்களுக்கு குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல இந்த ஆண்டு, 2023 ஜன.20ஆம் தேதி முதல் குறள் பரிசுத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 15,000 ஆக உயர்த்தி வழங்கிட ஆணையிடப்பட்டது. அந்த வகையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கா. நாகராஜன், மாணவி ரா.விசாலாட்சி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் செ. ஹேம்நாத், வெ. சந்தோஷ், மாணவிகள் சீ.நிவேதா, இர.காவ்யா, து.லோகிதா, செ.லக்க்ஷனா, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் சந்தோஷ் ஆகிய ஒன்பது மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30) பரிசுத் தொகை தலா ரூ.15ஆயிரத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

இதையும் படிங்க:அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரிக்கென புதிய வலைத்தளம் உருவாக்கம்

ABOUT THE AUTHOR

...view details