சென்னை:சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு பருவத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இன்று 3ஆவது பருவத்திற்கான தமிழ் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அனைத்து இளங்கலை வகுப்புகள் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 10 மணிக்குத் தேர்வு அறைகளுக்குச்சென்ற மாணவர்களுக்கு 4ஆவது பருவத்திற்கான தமிழ் அரியர் தேர்வு வினாத்தாள்(பழைய வினாத்தாள்) வழங்கப்பட்டது. இதன்காரணமாக, அந்தத் தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மதியம் நடைபெற இருந்த தமிழ்ப்பருவத்திற்கான அரியர் தேர்வும் ரத்து செய்யப்பட்டு, தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.