சென்னை:அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான போர் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தியது. ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியது முதல் அதிமுகவில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக ஜூன் 23 பொதுக்குழு, ஜூலை 11 பொதுக்குழு, அன்றே அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது போன்றும் இது தவிர மாறி மாறி இரு அணிகளும் நீதிமன்றத்தை நாட, அது தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற ஒரு நீதிபதி அமர்வு ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், இரு நீதிபதி அமர்வு ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தது. பொதுக்குழு செல்லும் என ஈபிஎஸ்சுக்கு ஆதரவான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நேற்று (செப் - 30)ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடைவிதித்து, வழக்கை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த தீர்ப்பானது இடைக்கால பொதுச் செயலாளரில் இருந்து பொதுச் செயலாளர் ஆகும் ஈபிஎஸ்சின் கனவை தகர்த்துள்ளது.
பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை:அதிமுகவின் 50வது ஆண்டு நிறைவு விழா வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வரவுள்ளது. இந்த நிறைவு விழாவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி அன்று பொதுச் செயலாளர் பதவியேற்க ஈபிஎஸ் தயாராக இருந்தார். அதற்கான வேலைகளை ஈபிஎஸ் தரப்பினர் விரைந்து செய்து கொண்டு வந்தனர். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு அதற்கு தடை போடும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஈபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஓபிஎஸ் தரப்பு சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
தீர்ப்பு தொடர்பாக பேசிய சிவி.சண்முகம், "நாங்கள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் பொழுது, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தினால் அது சரியாக இருக்காது. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. வழக்கில் முழுமையாக தீர்ப்பு வந்ததற்கு பிறகு தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது" என கூறினார்.
வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம்:ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டார். அதே கூட்டத்தில் பொதுச் செயலாளர் தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால் நவம்பர் 11ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வாதத்தை வைத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தை ஈபிஎஸ் தரப்பு நாட வாய்ப்புள்ளது.
இரட்டை சிலை சின்னம் நிரந்தரமா?இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "இந்த தீர்ப்பை மிக முக்கியமானதாக பார்க்கிறேன். இரட்டை தலைமையில் 33% சதவீதம் வாக்கு வந்தது. அதை ஏற்றுக்கொள்ளாமல் ஈபிஎஸ் சிக்கலில் மாட்டிக்கொண்டார். இனி 2024 நாடாளுமன்ற தேர்தல் தான் தலைமையை தேர்வு செய்யும். இரட்டை இலை இருக்குமா, இருக்காதா என்பது கேள்விக்குறி. இரட்டை இலை முடங்குவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். அதிமுக சட்ட விதிகளுக்கு முரணாக செயல்பட்டதால் ஈபிஎஸ்சின் கனவு தகர்க்கப்பட்டது" என கூறினார்
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தால் எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கும், மக்களுக்கும் நல்லதல்ல என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிவகாசி, விருதுநகர் மற்றும் மதுரை சுற்றுப்பயணம் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது. ஒருவேளை இரட்டை இலை முடங்கும் பட்சத்தில் தனியாகவே தேர்தலை சந்திக்க ஈபிஎஸ் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.
அதிமுகவின் பொன்விழா நிறைவு ஆண்டு விழா, தேவர் ஜெயந்திக்கு தங்க கவசம் போன்ற விவகாரங்களில் இரு தரப்பினரிடையே மோதல் போக்கே நிகழும் என கூறப்படுகிறது. நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ்தரப்பு இவை அனைத்தையும் தாண்டி, 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் ஈபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க:கே.எஸ்.அழகிரியின் பேரன் மீது தாக்குதல்.. அறநிலையத்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு