தமிழ்நாடு

tamil nadu

'கலைத்திருவிழாவில் சிறந்து விளங்கினால்...' - முதலமைச்சர் அறிவித்த சூப்பர் பரிசு

By

Published : Dec 8, 2022, 4:09 PM IST

கலைத்திருவிழாவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பும் காத்திருக்கிறது என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைத்திருவிழாவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு
கலைத்திருவிழாவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் கலைத்திருவிழா குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், ”தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் கலைத்திருவிழாக்கள் மூலம், இதுவரை காணாத வகையில் மாணவர்களின் பல்வேறு திறமைகள் வெளிப்படுவதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மாணவர்கள் கல்வியில் மட்டும் அல்லாது, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டியது அவசியம். நுண்கலை, ஆடல், பாடல், இசை, ஓவியம், சிற்பம், நாட்டுப்புறக்கலை என அனைத்திலும் மாணவர்களின் திறமைகள் தமிழ்நாடு முழுவதும் ஒருங்கே அரங்கேறும் வாய்ப்பு. இதற்கு முன்னர் இவ்வாறு இருந்தது இல்லை, என்னும் வாய்ப்பைக் கண்டு மகிழ்கிறேன்.

200 வகைக்கும் மேலான போட்டிகளில் 16 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று இமாலய சாதனைப் புரிந்துள்ளீர்கள். பங்கேற்றப் போட்டிகளுக்கு சமூக நீதிக்கான தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றி உள்ளீர்கள்.

சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பும் காத்திருக்கிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு நேரில் வந்து பரிசு அளிக்க இருக்கிறேன். கலைத்திருவிழாவை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு இருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் வாழ்த்துக்கள்” என அதில் கூறியுள்ளார்.

'கலைத்திருவிழாவில் சிறந்து விளங்கினால்...' - முதலமைச்சர் அறிவித்த சூப்பர் பரிசு

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!, மாணவர்களின் திறமைகளைக் கண்டு ஊக்குவிக்கும் வண்ணம் பாராட்டு தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் இப்படி ஊக்குவிப்பதால் எங்கள் மாணவர்களும், பெற்றோர்களும் வானைத் தாண்டிய உயரங்களையும் அடைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அனுமதிக்கலாமா? பாமக நிறுவனர் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details