சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையின்போது, அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில் சட்டப்பேரவையின் மாண்பை மதிநுட்பத்தோடு செயல்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றியதற்கு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று (ஜன.11) பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் காலங்களில் பேரவையின் மாண்பை களங்கப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் உரையின்போது, ஆளுநர் உரைக்கு முன்னரும் அதன் பின்னரும் மன்ற உறுப்பினர்கள், பேரவைத் தலைவர் முன் நின்று எவ்வித கோஷங்களையும் எழுப்பியிருக்கக் கூடாது எனவும்; வருங்காலத்தில் அதனை தவிர்க்கக்கூடிய வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒருபோதும் ஆளுநர் முன் நின்று களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், எந்தவித செயலையும் செயல்படுத்தக் கூடாது எனத் தெரிவித்தார். எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எதிர்ப்பை தெரிவித்துவிட்டு அதன் பின்னர் வெளிநடப்பு செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளலாம் எனவும்; அதே நேரத்தில், பேரவைத் தலைவர் இருக்கை முன், கீழே அமர்ந்து தர்ணா போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபடக்கூடாது எனவும் கூறினார்.