சென்னை:அம்பத்தூரை அடுத்த பாடி, சத்தியவதி நகர், 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (57). இவர் அம்பத்தூர் அடுத்த அத்திபட்டில் ஆட்டோ மொபைல் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனி நிர்வாகத்தில், சரவணனுக்கு உறுதுணையாக அவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணி (27) இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று(மார்ச் 22) இரவு ஆதர்ஷ் சுப்பிரமணி கம்பெனியில் வேலை முடிந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர் தன் வீட்டருகே தெருவில் வந்து கொண்டிருந்தார்.
சிசிடிவி உதவியுடன் குற்றவாளி கண்டுபிடிப்பு
அப்போது, எதிரே வந்த ஒரு கார், இவரது காரை வழிமறித்தது. பின்னர், அதில் இருந்து இறங்கிய 3 நபர்கள் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை கத்தியைக் காட்டி மிரட்டி காரிலிருந்து இறக்கியுள்ளனர். பின்னர், அந்த மர்ம கும்பல் அவர்கள் வந்த காரில் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை கடத்திச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தின் தந்தை சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் சரவணன் புகார் செய்தார்.
ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் கடத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை வாடகை கார் மூலம் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, பதிவின் மூலம் காரின் உரிமையாளரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
காவல்துறையினரின் அதிரடி கைது
பின்னர், அவரது காரில் பொருத்திய ஜி.பி.ஆர்.எஸ் கருவியின் மூலம், கார் சென்று கொண்டிருந்த பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது, கார் கும்மிடிபூண்டி வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்த, ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை காவல்துறையினர், கடத்தப்பட்ட காரைப் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். பின்னர், ஆந்திர மாநிலம், காளாஸ்திரி பகுதியில் சென்ற காரை நள்ளிரவு காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
பின்னர், காவல்துறையினர் கடத்தப்பட்ட ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை காரிலிருந்து மீட்டனர். மேலும், காவல்துறையினர் காரை பறிமுதல் செய்ததுடன் 3 கடத்தல்காரர்களைப் பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆவடி அடுத்த அரிக்கம்பேடு, லட்சுமி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (37), முகப்பேர் மேற்கு, 3வது பிளாக்கை சேர்ந்த சிலம்பரசன் (20), அயப்பாக்கம், அபர்ணா நகர், மதர்லேண்ட் தெருவைச் சார்ந்த ஜீவன்பிரபு (21) ஆகியோர் எனத் தெரியவந்தது.