சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதிவரை நடந்தது. மொத்தமுள்ள 27 ஆயிரத்து 791 பதவிகளுக்கு, ஒரு லட்சத்து 698 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதில் ஆயிரத்து 246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, இறுதியாக 80 ஆயிரத்து 819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 346 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 24 ஆயிரத்து 416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
74 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குப்பதிவு?
இதில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்த முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 74.37 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. மேலும் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனையொட்டி இரண்டாம் கட்டத் தேர்தல் பரப்புரை இன்று (அக்.7) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து தேர்தல் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாகவும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 74 விழுக்காட்டுக்கும் மேலாக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அவதூறு வழக்கில் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட்!