தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" - மாமன்னன் அப்டேட்! - உதயநிதி ஸ்டாலின்

"பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என குறிப்பிட்டு மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 19, 2023, 3:40 PM IST

Updated : May 19, 2023, 5:28 PM IST

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் “பரியேறும் பெருமாள்” படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது முதல் தடத்தை பதித்தார். பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி வெளிவந்த அப்படம் வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் மூலம் மாரி செல்வராஜ் பெற்ற வெற்றி அடுத்தகட்ட நகர்வாக தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பை வழங்கியது. இப்படியாக மாரி செல்வராஜால் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்புதான் “கர்ணன்”.

இந்தப் படம், கரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் வெளியாகியதால், படத்தின் வசூலில் சிறிது பாதிப்பு இருந்தாலும், லாபகரமான படமாக அமைந்தது. தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இந்த வரிசையில் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து “மாமன்னன்” என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர், மாரி செல்வராஜ். மேலும் இந்தப் படமே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.

இதுமட்டுமன்றி இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிறப்பம்சமாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி, வடிவேலுவின் லுக் அனைவராலும் வியந்து ரசிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ரெட் ஜெயன்ட் மூவீஸ்” தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பாடல் ஆசிரியர் யுகபாரதி வரிகளில், நடிகர் வடிவேலு பாடி, இப்படத்தில் இடம்பெறும் பாடல் மே 19ஆம் தேதி வெளியாகும் என கடந்த மே 17ஆம் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாமன்னன் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இன்று மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என குறிப்பிட்டு மாலை 5 மணிக்கு, ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:50 நாட்களைக் கடந்த விடுதலை பார்ட் 1 - படக்குழுவினர் உற்சாகம்!

Last Updated : May 19, 2023, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details