சென்னை:கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம் (28). இவர் மீது ரத்தினபுரியைச் சேர்ந்த குரங்கு ராம் கொலை வழக்கு உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, மோதல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளை கோயம்புத்தூர் போலீசார் தீவிரமாக தேடியும் கைதும் செய்து வருகின்றனர். அந்க வகையில் கவுதம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ரவுடி கவுதம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், நா்ன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிதடியில் ஈடுபட்டு வந்தேன். என் மேல் 10 முதல் 15 வழக்குகள் உள்ளன. திருமணத்துக்குப் பிறகு எந்த விவகாரத்திலும் ஈடுபடவில்லை. மனைவி, மாமியார், அவரது சகோதரி மீது காவல் துறையினர் கஞ்சா வழக்குப் போட்டுள்ளனர். என் மீது 7 வழக்கில் பிடிவாரண்ட் உள்ளது. இதற்காக என்னைக் காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல பார்ப்பது நியாயம் இல்லை. நான் திருந்தி வாழ நினைக்கிறேன்.
சரணடைந்துவிடு இல்லாவிட்டால் சுட்டுப் பிடிக்க வேண்டியிருக்கும் என்று காவல் துறையினர் மிரட்டுகின்றனர். போலீசாரிடம் சரணடைய பயமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. முன்னதாக, கஞ்சா வழக்கு தொடர்பாக கவுதமின் மனைவி, அவரது சகோதரி, மாமியார் ஆகியோரை காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்திருந்தனர்.