தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி வழங்க மறுப்பது அவமானப்படுத்தும் செயல்! - tamilnadu public exams

சென்னை : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணி வழங்க மறுப்பது அவமானப்படுத்துவதாக உள்ளது என தமிழ்நாடு நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

State Secretary nandakumar
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் நந்தகுமார்

By

Published : Feb 25, 2020, 11:59 PM IST

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கென மாணவர்கள் தீவிரமாக பயின்று கொண்டிருக்கும் அதே நேரத்தில், தேர்வு நடத்துவதற்கு மையங்களைத் தயார்படுத்தும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

இதையடுத்து, அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அலுவலர்கள் உட்பட பொதுத்தேர்வு பணிகளுக்கு அனைத்து வித பள்ளிகளிலிருந்தும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கிடையில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் வழங்கக்கூடாது என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார், ஈ டிவி பாரத்க்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர்ந்து அரசு தேர்வு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால், இந்தாண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு பணிக்கு பயன்படுத்தமாட்டார்கள் என்பது வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே, தனியார் பள்ளி ஆசிரியர்களை அவமானப்படுத்தாமல், அவர்களுக்கும் பொதுத்தேர்வு பணியில் பணி வழங்க வேண்டும் என்றார்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணி வழங்காதது குறித்து நந்தகுமார்

இதனைத் தொடர்ந்து பேசிய நந்தகுமார், “தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மூன்றாண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை ஆண்டிற்கு ஒருமுறை என மாற்றியுள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார அனுமதி வழங்கினாலும், இன்னும் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது.

பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க மறுப்பதால் பெற்றோர்கள் இணையதளத்தை பார்த்து எங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு அச்சப்படுகின்றனர். பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பொதுத்தேர்வு எழுத முடியாது என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, மூன்றாண்டுக்கு ஒருமுறை பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, ”அறை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளுக்கு தனியார் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். முதன்மைக் கண்காணிப்பாளர் பணிக்குத்தான் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினோம். அதை சிலர் தவறாக புரிந்துகொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கலாம்” என அரசு தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள் நிரப்பும் விவகாரம்: ராமதாஸ் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details