சென்னை: மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் ஆங்காங்கே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் கடந்த 9ஆம் தேதி அதிமுக சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, நிவாரண உதவிகளை பெற மக்கள் குவிந்தனர். இதல் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், 14 வயதுடைய சிறுமி மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்.கே.நகர் போலீசார் 174 என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது அதில் சிறுமி மூச்சுத்திணறியோ கூட்ட நெரிசலில் யாராவது நெரித்தோ உயிரிழக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். அதேபோல் சிறுமி கூட்ட நெரிசலில் நிற்காமல் தனியாக நிற்பது போல் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.