சென்னை: ரயில்வே தண்டவாளம் அருகே, அவ்வப்போது இளைஞர்கள் விளம்பர மோகத்தால் செல்ஃபி எடுக்கும்போது கவணக்குறைவால் அதிகளவில் இறப்புகள் நேரிடுகிறது. இதனால் இனி ரயில்வே தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே இருப்புப்பாதை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி - பிளாஸ்பூர் விரைவு ரயில் வஞ்சிபாளையம் மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே வேகமாக சென்றுகொண்டிருந்தபோது பாண்டியன் (23) மற்றும் விஜய் (24) ஆகிய இருவரும் மதுபோதையில் தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது ரயிலில் அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பாக திருப்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதே போன்று கடந்த 13 ஆம் தேதி காரைக்கால் - பெங்களூர் விரைவு ரயில், வாழப்பாடி மற்றும் ஏத்தாப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தபோது காங்கேயன் (22) என்பவர் தனது நண்பர்களுடன் தண்டவாளம் அருகே ரயில் முன் நின்று செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அவருடன் செல்ஃபி எடுக்கச் சென்ற மற்றொரு நபரும் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பாக சேலம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.