சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுவதைக் கண்டறிந்த அரசு, உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றிய துரைராஜ், புவியியல் ஆசிரியர் சிங்காரவேலு, அறிவியல் ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இடமாற்றம் தொடர்பாக அரசு பல்வேறு காலகட்டங்களில் பிறப்பித்த அரசாணைகளுக்கு முரணாக இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து, திருத்துறைப்பூண்டி பள்ளியிலேயே பணியில் தொடர அனுமதிக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.