தலைமைச் செயலகத்தில் உலா வரும் தெரு நாய்கள் சென்னை:சென்னையில் கடந்த வாரம் ராயபுரம் பகுதியில் வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று கிட்டதட்ட 25-க்கும் மேற்பட்டோரை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு தான் அந்த நாய்க்கு 'ரேபிஸ் நோய்' இருந்தது தெரியவந்தது. இதனால், நாய் கடிபட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் பணியை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் தொடங்கியது. ஏற்கனவே, இரண்டு தவனை தடுப்பூசிகள் அவர்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, சென்னை முழுவதிலும் உள்ள தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை நீக்குவது தொடர்பான மருந்துகள் வழங்கும் திட்டத்தினை சென்னை மாநகராட்சி தொடங்கும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று இந்த திட்டமானது, சென்னையில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இருந்தபோதிலும், அரசு அலுவலகங்களில் நாய்கள் சர்வ சாதாரணாமக சுற்றித்திரிவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட நாய்கள் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் மட்டும் சுற்றித் திரிகிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்திப்பதற்காகவும்; பிற அரசு தேவைகளுக்காகவும் வந்து செல்லக்கூடிய இடத்தில் நாய்கள் இதுபோன்று சுற்றித் திரிவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தலைமைச் செயலகத்தில் சட்டபேரவை வளாக நுழைவு வாயில், சட்டமன்ற உறுப்பினர்களின் அறை வாசல் குறிப்பாக, சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் அறை என எல்லா இடங்களிலும் நாய்கள் படுத்து உறங்குவதைப் பார்க்க முடிகிறது.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசனிடம் கேட்டபோது, 'தலைமைச் செயலகத்தில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உள்ளே சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் இருக்கிறதா? இல்லையா? என தெரியாது. அதனால், ரேபிஸ் தடுப்பூசியும் முடிந்தளவிற்கு இங்கு சுற்றித் திரியும் நாய்களுக்கு போட வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:"சட்டங்கள் நாய்களுக்கு சாதகமாக உள்ளது.. ஒரே வழி கருத்தடை தான்" - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்!