தனது வீட்டிற்கு வருகை தந்த பிரக்ஞானந்தா - பிரம்மாண்ட வரவேற்பு அளித்த பொதுமக்கள் சென்னை:ஆகஸ்ட் 23ஆம் தேதி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், நார்வே வீரர் கார்ல்சனுடன் முதல் 2 சுற்றுகளை டிரா செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா டைப்ரேகர் சுற்றில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் அடுத்த வருடம் நடைபெறும் செஸ் வீரர்களிடையே மிக முக்கியமாகப் பார்க்கக் கூடிய செஸ் கேண்டிடேட் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றார்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) காலை சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு அரசு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களும் திரளாக அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து நேரடியாகச் சென்னை பெரிய மேட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்திற்கு வந்த பிரக்ஞானந்தாவை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் வரவேற்றனர்.
அதனை அடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் முதலமைச்சரை பிரக்ஞானந்தா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, 30 லட்சத்திற்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதலமைச்சர் ஸ்டாலின், பிரக்ஞானந்தாவுக்கு வழங்கி கௌரவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பாடி குமரன் நகரில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு பிரக்ஞானந்தா வருகை தந்தவுடன் அவரது இல்லத்தின் அருகில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கிரீடம் அணிவித்து, சென்னை மாநகராட்சி 88வது வார்டு கவுன்சிலர் ஜி.வி.நாகவல்லி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்.
சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழியெங்கும் வாழை மரத் தோரணங்கள், வண்ண வண்ண கொடிகள், வண்ணக் காகிதங்கள் ஒட்டப்பட்டு பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் செண்டை மேளம் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட பிரக்ஞானந்தாவிற்கு, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மாலைகள் அணிவித்துக் கௌரவித்தனர்.
மேலும் அவரது பள்ளி மாணவர்கள் ரோஜா மலர்களைத் தூவி கை கொடுத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதேபோன்று பிரக்ஞானந்தா வீட்டின் அருகில் உள்ளவர்கள் வழி நெடுகிலும் ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்து வருகின்றனர். தற்போது அனைவரது வாழ்த்து மழையிலும் பிரக்ஞானந்தா நனைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சச்சின் சாதனையை முறியப்பார் ரோகித் சர்மா? - ஆசிய கோப்பையில் ஒளிந்துள்ள ரகசியம்!