தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள்(ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018ஆம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுமதி அளித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக அறிவித்தார். இந்தச் சட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நிதி உதவி பெறும், அரசு நிதி உதவி பெறாத பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும்.
அதன்படி மெட்ரிக்குலேஷன் இயக்குனரகமானது தனியார் பள்ளிகள் இயக்குனரகமாக மாற்றப்பட்டது. அதன்கீழ் சுயநிதி தனியார் பள்ளிகள், மாநிலக் கல்வி வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ), இந்திய இடைநிலைக் கல்வி வாரியம், பன்னாட்டு இளங்கலைஞர் எனும் பட்டம் பெறும் பல்கலைக்கழகம் மற்றும் அத்தகைய பிற வாரியங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டன.
மேலும் அந்தச் சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதில் கல்வி முகவாண்மை ஒவ்வொன்றும் மாணவர்களை மனரீதியிலான, உடல் ரீதியான, பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். உள்ளடங்கலாக மாணவர்களின் உயிர் பாதுகாப்பு, உடைமை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
முடிந்தவரையிலான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கல்வி முகவாண்மை ஒவ்வொன்றிலும் அரசால் பிறப்பிக்கப்படும் குறித்த வகை அறிவுறுத்தலுக்கும்ம், அரசால் அதிகாரம் அளிக்கப் பெற்ற தகுதியுடைய அதிகார அமைப்பின் அறிவுறுத்தலுக்கும் தனியார் பள்ளிகள் இணங்க வேண்டும்.
தனியார் பள்ளி ஒவ்வொன்றிற்கும் பாடத்தொகுதிக்கும், பாடத்திட்டத்தை கற்பிப்பதற்கும் கல்வியின் பல்வேறுபட்ட நிலைகளுக்காக வகுத்து அளிக்கப்பட்ட வழிகாட்டு நெறி முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் நல்ல அறிவுடைய பாடத்திட்டம், இணை பாடத்திட்டம், பிற பாடத்திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் கல்வியில் நிலைகளுக்காக உரிய வாரியத்தினால் அளிக்கப்பட்ட மதிப்பீட்டு வகை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தனியார் பள்ளிகள் மாணவர் சரியாகப் கற்கவில்லை என்பதன் அடிப்படையில் வாரியத் தேர்வு எழுதுவதிலிருந்து தடுத்தல் கூடாது. தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் தனியார் பள்ளிகளுக்குள்ளே நடைபெறும் நலக்கேடான போட்டியை தடுக்கும் விதமாக அரசால் அளிக்கப்படும் உத்தரவிற்கு உட்பட்டு நடத்துதல் வேண்டும்.
தனியார் பள்ளி ஒவ்வொன்றின் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் சேர்க்கையை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 30 நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடவேண்டும். அதனுடைய அறிவிப்புப் பலகையை இணையதளம், பிற எந்த வடிவத்திலும் வெளியிடலாம்.
தனியார் பள்ளி ஒவ்வொன்றும் கல்வி மற்றும் கற்பித்தல் சூழலின் தரத்தை மேம்படுத்துவதில் பெற்றோர்கள் பங்கெடுக்க செய்வதற்கு பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குமுறைப் படுத்துதல்) சட்டத்தின்படி அமைக்கப்பட்ட கட்டணத்தை நிச்சயிக்கும் குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தவிர பிற எந்தக் கட்டணத்தையும் அல்லது பிற எந்த செலுத்தத்தையும் பெறக்கூடாது.
தகுதிஉடைய அதிகாரம் பெற்ற அமைப்பானது தனியார் பள்ளிகள் எதனையும் ஆய்வு செய்ய உரிமை உண்டு. தனியார் பள்ளி எதுவும் தனியார் பள்ளியில் தொடங்கப்பட்ட பிரிவு, படிப்பு, மொழிவழிக் கற்பித்தல் ஆகியவை மாணவர்களின் கற்பித்தலின் தொடர்ச்சியான படிப்பிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யாமலும், தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தின் முன் ஒப்புதலைப் பெறாமலும் மூடப்படுதல் கூடாது.
தனியார் பள்ளிகள் கல்வி ஆண்டு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது பள்ளிகள் மூடுவதற்காக அனுமதி அளிக்கப்படாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் சட்டம் இயற்றப்பட்ட ஓராண்டை கடந்தும் தனியார் பள்ளிகளில் ஒழுங்குமுறை சட்டத்திற்கான விதிகள் இயற்றப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் கரோனோ ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் தனியார் பள்ளிகளில் பல்வேறு பள்ளிகளில் கட்டணம் செலுத்த நிர்ப்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அதில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூல் செய்வதாகவும் பெற்றோர்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கல்வியாளர்கள், "தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் புதிய சட்டம் உரிய நேரத்தில் இயற்றியிருந்தால் அரசு விதிகளை மீறி கட்டணம் செலுத்தச் சொல்லி நிர்பந்தம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை அரசால் எடுத்திருக்க முடியும்" எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டத்திற்கான விதிகளை வெளியிட்டு அதனை தனியார் பள்ளிகளில் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க:பாடப் புத்தகங்களின் பக்கங்களை குறைக்க முதலமைச்சரிடம் ஒப்புதல்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்