தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஒப்பந்தத்தை பிரதமர் நிராகரிக்க வேண்டும்' - Latest Chennai news

சென்னை: இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஒப்பந்தத்தை பிரதமர் நிராகரிக்க வேண்டும் என மே17 தின இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருமுருகன் காந்தி

By

Published : Nov 2, 2019, 10:14 AM IST

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "மே17 இயக்கம் சார்பில் தமிழ்நாடு உருவான தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் கட்சி, சாதி, மத எல்லை கடந்து நாம் அனைவரும் தமிழன் என்கிற ஒற்றை முழக்கத்தோடு தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடுவோம் என்ற உறுதிமொழியை ஏற்போம்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிராந்திய பொருளாதார ஒப்பந்த மாநாடு நடக்கவுள்ளது (Regional Comprehensive Economic Partnership). இந்த மாநாட்டில் ஆசிய கண்டத்திலிருக்கின்ற நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் பங்குபெறுகின்றன. இந்த மாநாடு நாடுகளுக்கிடையே வணிக ஒப்பந்தம் எட்ட நடக்கிறது. குறிப்பாக உலகளவில் 40 முதல் 60 சதவிகித வணிகம் நடக்கக்கூடிய நாடுகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தை உருவாக்குகிறது.

இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு ஏற்கக்கூடாது. இதனால் தமிழ்நட்டிற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் வருகின்ற 4ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இது ஒரு முற்றிலும் தவறான முடிவாகும். இந்த ஒப்பந்தத்தால் என்ன பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றால், நியூசிலாந்து நாட்டில் பால் உற்பத்தி அதிகமாக நடக்கிறது. அவர்கள் தங்களது நாட்டு பால்சார்ந்த பொருள்களை சந்தைப்படுத்த இடம் தேடிவருகிறார்கள். இந்த ஒப்பந்தம் மூலம் அந்நாட்டின் பால்பொருள்கள் எந்தவித தடையுமின்றியும் வரி கட்டுப்பாடுகளின்றியும் எந்த எல்லை வரம்புகளுமின்றி இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தி தொழில் முற்றிலும் நசுங்கிப் போய்விடும். இதேபோன்று ஒரு அழிவு இலங்கைக்கு ஏற்பட்டது என்பது நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

செய்தியாளர்களை சந்திக்கும் திருமுருகன் காந்தி

அதேபோல் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் வாசனைப் பொருள்கள், மிளகு உள்ளிட்ட பொருள்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும். இதனால் இந்தியப் பொருள்களின் விற்பனை கேள்விகுறியாகிவிடும். இப்படி ஒவ்வொரு நாடுகளிலிருந்து ஒவ்வொரு பொருள்கள் இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்பதால் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவடையும். ஆகவே நாளை பாங்காக் செல்லும் பிரதமர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என்று இங்கிருக்கும் தலைவர்கள் அரசியல் வேறுபாடுகளைக் கலைந்து வலியுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி இளைஞரிடம் ரகசிய விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details