சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் Coop Bazaar என்ற கூட்டுறவுச் சந்தை செயலியைத் தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ''தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் வங்கி சேவை மற்றும் விவசாயத்துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மலிவான விலையில் நுகர்வோருக்கு கிடைத்திடும் வகையில் எளிதாக இல்லங்களில் இருந்தவாறே இந்த Coop Bazaar செயலி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். எளிய முறையில் குறைவான சேவைக் கட்டணத்துடன் Coop Bazaar செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 8 கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்யும் 64 வகையிலான பொருட்கள் இந்த Coop Bazaar செயலி மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது'' என்றார்.
மேலும், சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலோடு இந்த Coop Bazaar செயலி பற்றி அறிவித்தோம் எனவும்; தற்போது அதை இன்று செயல்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார். ''சமீபத்தில் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது என்றும்; தக்காளி விளையும் பகுதிகளில் வெப்பம் மற்றும் மழை காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது.
தக்காளி உயர்வால் பெரும்பாலான மக்கள் சமையலில் தக்காளியை குறைக்கத் தொடங்கிவிட்டனர். தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் நியாயவிலைக்கடைகளில் தேவையான அளவிற்கு தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது.111 மையங்களில் விற்கப்படுகிறது. சென்னை,தாம்பரம்,ஆவடி மாநகராட்சிகளில் முதற்கட்டமாக அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் விநியோகிக்கப்படுகிறது'' என்றார்.