சென்னை: தலைமைச் செயலகத்தில் ஆவின் பால் விலை தொடர்பாக செய்தியாளர்களை அமைச்சர் நாசர் சந்தித்தார். அப்போது , விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பசுவின் பால் கொள்முதல் விலையை 32 ரூபாயில் இருந்து, 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எருமைப்பால் 41 ரூபாயில் இருந்து 44 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதாகவும், தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் 48 ரூபாய்க்கு சில்லரையாக விற்கப்படும் நிலையில், கார்டு வைத்திருப்பவர்களுக்கு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சில்லரையாக வாங்குபவர்களுக்கு மட்டுமே 60 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த ஆரஞ்சு நிற பாலை 11 லட்சம் பேர் மட்டுமே வாங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.