சென்னை:கடந்த 13ஆம் தேதி அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள ஃபெட் பேங்க் கோல்டு லோன் வங்கியில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று ஊழியர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, கத்தி முனையில் கட்டிப்போட்டுவிட்டு 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றது.
இந்த கொள்ளையில் வங்கி ஊழியர் முருகன் அவரது நண்பர்கள் சூர்யா, பாலாஜி,சந்தோஷ் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தக் கொள்ளை கும்பலைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து கொள்ளைச்சம்பவத்தில் தொடர்புடைய வில்லிவாக்கம் பகுதியைச்சேர்ந்த பாலாஜி(28), சந்தோஷ்(30) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முருகன் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொள்ளைச்சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் இவர்களிடமிருந்து 8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 நான்கு சக்கர வாகனம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பயத்தை உண்டாக்கிய புகை: இந்த நிலையில் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு கொள்ளையனான சூர்யா என்பவரும் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகன் தங்களுடன் பயின்ற பள்ளி நண்பர்கள் மற்றும் ஜிம் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து பல நாட்களாகத் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக வங்கியில் இருந்து நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்செல்வதற்காக சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் வெளியில் இருந்து, மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
நகையைக் கொள்ளையடித்தவுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேட்டிற்குச்சென்று கார் மூலமாக பல்லாவரம் பகுதிக்கு சென்று அங்கு ஒரு லாட்ஜில் நகையைப் பிரித்து உள்ளனர். குறிப்பாக லாட்ஜில் ஒரு கிலோ நகையை உருக்கும்போது அதிகப்படியான புகை வெளியேறியதால், கொள்ளையர்கள் பயந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அனைவரும் பிரிந்து விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகியப் பகுதிக்குச்சென்று பதுங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதுக்கப்பட்ட நகை:குறிப்பாக 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மீதமுள்ள 14 கிலோ தங்க நகைகள் தொடர்பாக முக்கிய தலைவனான முருகனிடம் விசாரணை நடத்திய போது, சூர்யாவிடம் நகைகள் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போது சூர்யாவிடம் கேட்டபோது முருகனிடம் தான் நகைகள் இருப்பதாகக் கூறி காவல்துறையினரை குழப்ப முற்பட்டனர்.
இந்நிலையில் காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் விழுப்புரத்தில் உள்ள சூர்யாவின் நண்பர் வீட்டில் நகைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து விழுப்புரத்தில் சோதனை மேற்கொண்டதில், சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அதன்பின்பு கணக்கீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை ஆய்வு செய்தபோது மொத்தமாக 13 கிலோ தங்க நகைகள் பிடிபட்டது தெரியவந்தது.