சென்னை: தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வில்லனாக நடித்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிகைகளை வில்லன் பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகள் அதிகம் இருக்கும். இப்போது அது குறைவாகிவிட்டது. அந்த வில்லன் காட்சிகள் லியோ திரைப்படத்தில் த்ரிஷாவுடன் இருக்கும் என்று விரும்பினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை" என்றார்.
இவரது இந்த பேச்சு சர்சையை கிளப்பியது. இது குறித்து த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில், "மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசும் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாலியல் ரீதியாகவும், ஆணாதிக்க மனநிலையும், பெண்களை அவமரியாதை செய்யும் விதமாகவும், பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசும் வீடியோ மோசமாக இருக்கிறது.
மேலும், அவர் என்னுடன் திரையில் நடிக்க விரும்பலாம். ஆனால் நான் இதுவரை இது போன்ற ஒரு நபருடன் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு மேலும் எனது திரை வாழ்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். இவர்களை போன்றவர்களால் தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு அவப்பெயர்" என பதிவிட்டு இருந்தார்.