சென்னை : வேளச்சேரியில் கடந்த 17ஆம் தேதியன்று நடந்து சென்ற பெண்ணிடம் 7 சவரன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் பறித்துச்சென்றதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். அதேபோன்று இரண்டு இடங்களில் செயின் பறிப்பு முயற்சி சம்பவங்களும் நடந்தன. இதுதொடர்பாக வேளச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி, அதேபோல பம்மல் பகுதியில் 6 சவரன்செயின் பறிக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக 17,18,19ஆம் தேதிகளில் பல இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று, சுமார் 30-க்கும் மேற்பட்ட தங்க செயின்கள் பறிக்கப்பட்டதாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.
இதனால் உடனடியாக கிண்டி தனிப்படை போலீசார் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரே நபர் அனைத்து இடங்களிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது காவல் துறையினருக்குத் தெரியவந்தது. ஆனால், சிசிடிவி காட்சிகளில் செயின் பறிப்பு கொள்ளையர்களின் நம்பர் பிளேட் பதிவாகாததால் காவல் துறையினருக்கு கொள்ளையர்களை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து செயின் பறிப்பு கொள்ளையர் சென்ற வேளச்சேரி காமாட்சி மருத்துவமனை அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய தனிப்படை காவலர்கள் சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்பு இருசக்கர வாகனத்தில் தனிப்படை காவல்துறையினர் புறப்படும்போது, சிசிடிவி காட்சிகளில் பதிவான அதே இருசக்கர வாகனம் அவ்வழியாகச் சென்றதைக்கண்டு அதிர்ந்துள்ளனர். உடனடியாக காவலர்கள் அந்த இருசக்கர வாகனத்தை துரத்தும் போது, காவல்துறை வருவதை அறிந்த அந்த நபர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இருந்தும் காவலர்கள் விடாமல் சினிமா பட பாணியில் சுமார் 4 கி.மீ., துரத்திச்சென்று இரு நபர்களையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தும்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.