தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ட்ரோன்களைப் பயன்படுத்தி கடல் அலையில் சிக்கித் தவிப்போரை காக்க திட்டம் - மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவு

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின்கீழ் செயல்படும் மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி உயிருக்குப் போராடுபவர்களை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

drones
drones

By

Published : Oct 16, 2021, 1:36 PM IST

சென்னை: கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டலின் தலைமையில் செயல்படும் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை ட்ரோன்களைப் பயன்படுத்தி காக்க திட்டம் வகுத்துவருகின்றனர்.

குறிப்பாக உயிர் காக்கும் மிதப்பான்களை ட்ரோன்கள் மூலம் விரைவாக நீரில் தத்தளிப்பவர்கள் வசம் கொண்டுசென்று கொடுத்து அவர்கள் நீரில் மூழ்கிவிடாமல் காக்கும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன்கள் கடல் காற்றுக்கு எதிராக நிலையாக நின்று செயல்படும் வகையிலும், கடற்கரையைவிட்டு நான்கு கி.மீ. தொலைதூரம் செல்லும் திறன்கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு குளிக்கவரும் பொதுமக்கள் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து இந்தத் திட்டமானது வகுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் கடலோரப் பாதுகாப்புக் குழுமம், சென்னை மாநகராட்சி, தீயணைப்பு - மீட்புத் துறை, தமிழ்நாடு சுற்றுலாத் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவிற்காக அவசர உயிர்காப்பு சேவைக்காக 24 மணி நேரமும் 2 ஆம்புலன்ஸ்களை கடற்கரைச் சாலையில் நிறுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல கண்காணிப்பு கோபுரங்களை அதிகரிக்கவும், 50 ஆயுதப்படைக் காவலர்களுக்கு உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து பணியமர்த்தவும், 12 உயிர்காக்கும் பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகமாகிவரும் சூழலில் இத்திட்டங்கள் மூலம் பல உயிரிழப்புகளைத் தவிர்க்க இயலும் எனவும் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவுக்குப் புதிய ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details