சென்னை:கரோனா வைரஸ் தடுப்பூசியினை போட்டுக் கொள்வதற்கு முன்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிஎம்கே ரெட்டி நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார். மேலும் அந்த நேர்காணலில், "கரோனா வைரஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட 4 கோடி நபர்களில் 500 நபர்களுக்கு ரத்த உறைவு ஏற்பட்டு உயிரிழப்பு, பாதிப்புகள் உண்டாகியுள்ளன.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மூன்று நாட்களுக்குள் 93 பேர், ஏழு நாட்களுக்குள் 18 பேர், 28 நாட்களுக்குள் 11 பேர் என மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 305 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். மேலும், 63 நபர்களுக்கு சாதாரண பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி கரோனா வைரஸ் இறந்த செல்களின் மூலம் உருவாக்கப்பட்டது. இதனால் உடலில் செல்லும் பொழுது சிலருக்கு ரத்த உறைவு நோய் ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பு வராமல் இருப்பதற்கு ரத்த உறைவைத் தடுக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் அறிவுரை வழங்கியுள்ளது.
இதனை மூத்த மருத்துவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்துவதற்கு முன் இரண்டு நாட்களும்; செலுத்திய பின்னர் 8 நாட்கள் வரையும் இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்த மாத்திரை அனைத்து மருந்துக் கடைகளிலும் எளிதில் கிடைக்கும்.