சென்னை: மின்சார நுகர்வோர் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் நிதி நிலைமையையும், மத்திய அரசின் விதிமுறைகளையும் நன்கு அறிந்துதான், ஆயிரம் யூனிட்டுகளுக்கு குறைவான மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டிற்கு 6,000 ரூபாய் வரை பயன்பெறும் வகையில் 'மாதம் ஒரு முறை மின் கட்டணம்' என்ற வாக்குறுதி 2021ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தி.மு.க வால் அளிக்கப்பட்டது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதி பின்பற்றப்படாமல் வீடு, வணிகம், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப் பயன்பாட்டுக் கட்டணம் 400 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வு சென்ற ஆண்டு நடைமுறைக்கு வந்தபோது, இது குறித்து விளக்கமளித்த அப்போதைய மின் துறை அமைச்சர், இந்த மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறினார்.
மத்திய நிதி நிறுவனங்களான மின்விசை நிதி கார்ப்பரேஷன் (Power Finance Corporation), ஊரக மின்மயமாக்கல் கார்ப்பரேஷன் (Rural Electrification Corporation) போன்றவை 'ஆண்டுக்காண்டு மின் கட்டணம் திருத்தியமைக்கப்பட வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரில் 'ஆத்மநிர்பார்' திட்டத்தின்கீழ் (Atmanirbhar Project) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு 30,230 கோடி ரூபாய் கடன் அளித்ததாகவும், மின் கட்டணம் திருத்தப்படாததன் காரணமாக 3,435 கோடி ரூபாயினை மத்திய நிதி நிறுவனங்கள் நிறுத்தி விட்டதாகவும், இதுதான் மின் கட்டண உயர்விற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
மேலும், பத்து விழுக்காடு நிலக்கரியை அதிக விலைக்கு இறக்குமதி செய்து கொள்ள வேண்டுமென்று மத்திய அரசு அறிவிக்கை அறிவித்ததும் ஒரு காரணம் என்றும் தெரிவித்தார். ஆக மொத்தம், ஆண்டுக்காண்டு 6,000 ரூபாய் சலுகை என்று அறிவித்துவிட்டு, ஆண்டுக்கு 12,000 ரூபாய் நிதிச் சுமையை அளித்த அரசு தி.மு.க. அரசு. இது மட்டுமல்லாமல், சமீபத்தில் வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றிற்கு 13 பைசா முதல் 21 பைசா வரை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், 'நேரத்திற்கு ஏற்ற கட்டணம்' மற்றும் 'ஸ்மார்ட் மீட்டர்' ஆகியவை குறித்து மின்சார - நுகர்வோர் விதி முறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் திருத்தங்களில், பகல் நேர மின் பயன்பாட்டிற்கு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை குறைவான மின் கட்டணம், இரவு நேர மின் பயன்பாட்டிற்கு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை அதிகமான கட்டணம் வசூலிக்கவும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின்பு அபராதக் கட்டணம் வசூலிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு நடைமுறைக்கு வரும் என்றும், விவசாயம் தவிர இதர நுகர்வோர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்காண்டு மின் கட்டணத்தை உயர்த்துவது, நேரத்திற்கு ஏற்ற மின் கட்டணம், அபராதத் தொகை ஆகியவை ஏழையெளிய நுகர்வோர்களுக்கு எதிரான செயல். பொதுவாக, பகல் நேரங்களில் வீட்டில் உள்ள அனைவரும் அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று விடுவதால், மின் பயன்பாடு அனைத்து வீடுகளிலும் வெகு குறைவாகவே இருப்பது வழக்கம்.