சென்னை:ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று(டிச.21) தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ஐயப்பன் தாங்கல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வரும் சபீர் என்பவர் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதாகக் கூறி அந்த நபர் தொடர்பைத் துண்டித்துள்ளார். பின்னர் உடனடியாக இது குறித்து மாங்காடு காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் அந்த அடையாளம் தெரியாத நபர் கூறிய வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாததால் புரளி என்பது காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து தொடர்பு கொண்ட அந்த அடையாளம் தெரியாத நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, ஜப்பானிலிருந்து அழைப்பு வந்திருப்பதும், ’yearly salary’ என்ற ஆன்லைன் லோன் நிறுவனத்தினர் பேசியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சோதனை மேற்கொண்ட வீட்டில் வசித்து வரும் இம்ரான் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, சபீர் என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக புழல் பகுதிக்கு வீட்டை காலி செய்து சென்றது தெரியவந்தது. பின்னர் புழலில் வசித்து வரும் சபீரை பிடித்து விசாரணை செய்த போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் தாங்கலில் வசித்து வந்த போது yearly salary என்ற ஆன்லைன் லோன் ஆப் மூலமாக 5லட்சம் ரூபாய்க் கடன் வாங்கியதாகவும், அதன் பிறகு விபத்து ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்தமுடியாமல் போனதாகத் தெரிவித்துள்ளார்.